தசரா பொதுக்கூட்டத்துக்கு பிறகு உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார்


தசரா பொதுக்கூட்டத்துக்கு பிறகு உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:22 PM GMT (Updated: 4 Oct 2018 11:22 PM GMT)

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

அயோத்தியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர்கோவில் கட்டப்படும் என்று 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தங்களின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், கூட்டணி கட்சியான சிவசேனா பா.ஜனதாவை விமர்சித்து வருகிறது. வாக்கு வங்கிக்காகவே ராமர் கோவில் பிரச்சினையை பா.ஜனதா கையில் எடுத்ததாக குற்றம்சாட்டியது.

பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பின்னர் எப்போதும் கட்ட முடியாது என்று தெரிவித்தது.

இந்த நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் சரன்ஜி மகாதேவ் நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தவ் தாக்கரேயிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்திக்கு விரைவில் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது

இதுகுறித்து கட்சியின் முத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே விரைவில் அயோத்திக்கு செல்ல உள்ளார். தசரா பொதுக்கூட்டம் அக்டோபர் 19-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு பின் பயணத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தைரியம் சிவசேனா கட்சிக்கு மட்டுமே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story