‘‘மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்" பொதுமக்களுக்கு, கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்


‘‘மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு, கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 5 Oct 2018 2:06 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது;–

வருகிற ஜனவரி 1–ந்தேதி முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவிப்பு பலகை

மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு பலகைகளை ஊராட்சிகளில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கோவில்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகமாக வருகை தருவர். அந்த இடங்களிலும் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை அமைத்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கேபிள் டி.வி. மூலம் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

ஒவ்வொரு துறையும் வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பணிகளின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொய்வின்றி மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story