சூளைமேட்டில் துணிகரம் வீடு புகுந்து 92 பவுன் நகைகள் திருட்டு


சூளைமேட்டில் துணிகரம் வீடு புகுந்து 92 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 6 Oct 2018 3:15 AM IST (Updated: 5 Oct 2018 11:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சூளைமேட்டில் வீடு புகுந்து 92 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர்.

சென்னை,

சென்னை சூளைமேடு சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெரினா பேகம் (வயது 53). இவரது கணவர் இறந்துவிட்டார். 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவரும் பட்டப் படிப்பு படித்துள்ளனர். மகன் என்ஜினீயரிங் படித்து வரு கிறார்.இவரது கணவர் சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் இறைச்சி கடை நடத்தி வந்தார். கணவர் இறந்தபிறகு அந்த கடையை ஜெரினா பேகம் தொடர்ந்து நடத்தினார். தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஜெரினா பேகம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது.

நேற்று முன்தினம் இரவு ஜெரினா பேகம் தனது மகள்கள் மற்றும் மகனுடன் ஒரே படுக்கை அறையில் படுத்து தூங்கினார். இன்னொரு படுக்கை அறையில் பீரோ இருந்தது.

நேற்று அதிகாலை ஜெரினா பேகம் கண்விழித்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்திருந்தது தெரிய வந்தது.

ஓசையில்லாமல் பீரோவை திறந்து அதற்குள் இருந்த 92 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர். இந்த நகைகளை மகளின் திருமணத்திற்காக ஜெரினா பேகம் வாங்கி வைத்திருந்தார். இந்த துணிகர சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி கொள்ளை நடந்த வீட்டுக்கு நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Next Story