கோவை வெள்ளலூரில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம், 130 பேர் கைது


கோவை வெள்ளலூரில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம், 130 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2018 4:30 AM IST (Updated: 6 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கோவை வெள்ளலூரில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை வெள்ளலூரில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி நேற்று வெள்ளலுர் பஸ் நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது:–

வெள்ளலூர் பகுதியில் தற்போது புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனாலும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்ட உள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இந்த மதுக்கடையால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டாஸ்மாக் மதுக்கடை அருகில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story