தமிழக –கேரள எல்லையில் கோவையை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் கைது


தமிழக –கேரள எல்லையில் கோவையை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2018 5:30 AM IST (Updated: 6 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழக– கேரள எல்லையில் கோவையை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவரை கேரள போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட அட்டப்பாடி, அகழி உள்பட பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் அடிக்கடி போலீசார் மீது தாக்குதல் நடத்துவது, வன ஊழியர்களை பிடித்து செல்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

எனவே கேரளாவில் மாவோயிஸ்டுகளை அடக்குவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தண்டர்போல்டு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலையில் நுழைந்த பெண் மாவோயிஸ்டுகள் வெடிபொருட்களை வைத்து விட்டு சென்றனர். ஆனால் அவற்றை கேரள போலீசார் உரிய நேரத்தில் கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக–கேரள எல்லையான மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் கொரில்லா தாக்குதல் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் பெயரில் மிரட்டல் கடிதம் வெளியானது. இதைத்தொடர்ந்து கோவை கியூ பிரிவு போலீசாரும், கேரள போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்

இதற்கிடையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அகழி– மன்னார்காடு பகுதியில் மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினர் அகழி போலீஸ் உதவி கமி‌ஷனர் சுஜித் தாஸ் மேற்பார்வையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவரான டேனிஷ் என்கிற டேனி‌ஷன் (வயது 28) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாலக்காடு போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டு டேனிஷ் கோவை ராமநாதபுரம் சடை யப்ப தேவர் வீதியை சேர்ந்தவர். இவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். ஆனால் இவருடைய பெற்றோர் பற்றி எந்த தகவலும் இல்லை. டேனிஷ் எப்போது மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்தார் என்றும் தெரிய வில்லை.

டேனிஷ் காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போலீசில் புகார் செய்ய வில்லை. கர்நாடக மாநில வனப்பகுதி, பவானி ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்டு டேனிஷ் தீவிரமாக பணியாற்றியுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக வயநாடு, அட்டப்பாடி, நிலம்பூர் ஆகிய பகுதிகளை மையமாக கொண்ட மாவோயிஸ்டுகளை வழிநடத்தி வரும் தலைவர்களில் ஒருவராக டேனிஷ் இருந்து வந்துள்ளார். அவரிடம் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு தேபேஷ்குமார் பெகரா தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story