நாமக்கல்லில் 3,460 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்


நாமக்கல்லில் 3,460 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:15 AM IST (Updated: 6 Oct 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நடந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 3,460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, நிலோபர் கபில், சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 3,460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, நிலோபர் கபில், சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல்லில் தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் பதிவு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர். சரோஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2 ஆயிரத்து 552 பயனாளிகளுக்கு ரூ.55.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 198 பயனாளிகளுக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளையும், ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் 710 பயனாளிகளுக்கு ரூ.15.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளையும் என மொத்தம் ரூ.75.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3 ஆயிரத்து 460 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

முன்னதாக நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் கூறியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அனைத்து துறை தொழிலாளர்கள் மீது மிகுந்த மரியாதையும், அக்கறையும் கொண்டிருந்தார்கள்.

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுவரும் இயற்கை மரண உதவித்தொகையை ரூ.15ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் , ஈமச்சடங்கு உதவித்தொகையை ரூ.2ஆயிரத்தில் இருந்து ரூ.5ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திடும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணியிடத்தில் மட்டுமின்றி ஆஸ்பத்திரியிலோ, ஆஸ்பத்திரி செல்லும் வழியிலோ உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் ரூ.5 லட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். அதேபோல் இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்காக உடனடியாக ரூ.59.85 கோடி நிதியை ஒதுக்கி அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் வழங்கி உள்ளார். இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் பேசினார்.

இதற்கிடையே நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:- அனைத்து தொழிலாளர்களும் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ள நலவாரிய அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட முழு முயற்சியுடன் செயல்படவேண்டும். மேலும், பிற மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தொழிலாளர்களும் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொண்டால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

முன்னதாக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 1994-ம் ஆண்்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தினை ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 17 நல வாரியங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் பாஸ்கரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story