சாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியல்
சாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ளது பேலிதளா ஸ்ரீராம் நகர். இங்கு 70–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீராம் நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் ஆவர். பஸ் வசதி இல்லாத காரணத்தால், அருகிலுள்ள கன்னேரிக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். தவிர குழந்தைகளும் கன்னேரிக்கு வந்து அங்கிருந்து மந்தனை, எடக்காடு பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒத்தையடி பாதையாக இருந்த ஸ்ரீராம் நகர்– கன்னேரி வழியில் அரசு தார்ச்சாலை அமைத்து கொடுத்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதற்கிடையே அந்த சாலையை மேம்படுத்த பாலகொலா ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் இருந்த புதர் செடிகள் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடந்தது. அப்போது சாலை அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி தனியார் ஒருவர் பணியை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம் நகரை சேர்ந்த பள்ளி மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு நேற்று காலை 9 மணியளவில் கன்னேரி பஜாரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குந்தா தாசில்தார் ஆனந்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஸ்ரீராம் நகர்– கன்னேரி சாலையை அனைவரும் பயன்படுத்த எந்த தடையும் இல்லை, அதை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது, மேலும் அந்த சாலை தனக்கு சொந்தம் எனக்கூற எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் கன்னேரி பஜாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.