அந்தியூர் பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் ஏரி நிரம்பியது; தரைப்பாலம் மூழ்கியது


அந்தியூர் பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் ஏரி நிரம்பியது; தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 6 Oct 2018 3:30 AM IST (Updated: 6 Oct 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் ஏரி நிரம்பியது. இதனால் தரைப்பாலம் மூழ்கியது. சத்தியில் பெய்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் அந்தியூரில் காலை முதல் சாரல் மழை பெய்தது. அதேபோல் அந்தியூர் அருகே உள்ள கொண்டையம்பாளையத்திலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் மதியம் 3.30 மணி அளவில் பலத்த மழையாக மாறியது. இந்த மழை 4.30 மணி வரை கொட்டியது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டையம்பாளையம் அருகே நகலூர் ஏரிக்கு சென்றது. வறண்டு கிடந்த ஏரி நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

இதில் கொண்டையம்பாளையம்–வீரனூர் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தாசில்தார் பாலகுமாரன், ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி புகழேந்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டார்கள். பின்னர் பாலத்தின் இருபுறமும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 4.15 மணி முதல் 4.45 மணி வரை பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தோப்பூர் காலனியில் உள்ள சிவகாமி (வயது 40) என்பவரது வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

அதேபோல் அந்த பகுதியில் உள்ள சுமதி (35) என்பவரது வீட்டின் மண் சுவரும் ஒரு பக்கமாக இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தபோது 2 குடும்பத்தினரும் வீட்டில் இல்லை. வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி தவசியப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.


Related Tags :
Next Story