கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி ரோட்டில் நாற்று நட்டு விவசாயிகள் சாலை மறியல்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி ரோட்டில் நாற்று நட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கவுந்தப்பாடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட மாணிக்காவலசு, பெரியாக்கவுண்டன்வலசு, ஆயிக்கவுண்டன்புதூர், வெள்ளைபாறை, அணைப்புதூர், சிங்காநல்லூ£ர் ஆகிய பகுதிகளில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் நல்லாம்பட்டி கசிவுநீர் திட்ட வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணை திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் இந்த வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும் நல்லாம்பட்டி கசிவுநீர் திட்ட வாய்க்கால் மராமத்து பணிக்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கியும் இன்னும் பழுதான ‘ஷட்டர்கள்’ மாற்றப்படவில்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதன்காரணமாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் நாற்று நடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கக்கோரி மாணிக்காவலசு, அணைப்புதூர், ஆயிக்கவுண்டன்புதூர், சிங்காநல்லூர், பெரியாக்கவுண்டன்வலசு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு நெல் நாற்று கட்டுகள், மண் வெட்டி ஆகியவற்றுடன் கவுந்தப்பாடி– திங்களூர் சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ரோட்டில் நாற்று நட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளிடம் போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.