டீசல் விலை உயர்வை கண்டித்து கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


டீசல் விலை உயர்வை கண்டித்து கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:15 PM GMT (Updated: 2018-10-06T02:43:39+05:30)

நாகையில் டீசல் விலை உயர்வை கண்டித்து கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 3-வது நாளாக வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தையொட்டி நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகு மீனவர்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் தங்களது படகுகளை துறைமுக பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மீனவர்கள் வேலைக்கு செல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

Next Story