இயல்பான மழை தான் பெய்கிறது: ‘ரெட் அலர்ட்’ பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை - கலெக்டர் அன்புசெல்வன்


இயல்பான மழை தான் பெய்கிறது: ‘ரெட் அலர்ட்’ பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை - கலெக்டர் அன்புசெல்வன்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:30 AM IST (Updated: 6 Oct 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

இயல்பான மழை தான் பெய்கிறது, எனவே கடலூர் மாவட்ட மக்கள் ‘ரெட் அலர்ட்’ அச்சப்பட வேண்டாம் என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கடலூரில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறதே தவிர கடலூர் மாவட்டத்துக்கு என்று தனியாக ‘ரெட் அலர்ட்’ எதுவும் அறிவிக்க வில்லை. எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம். இயல்பான பருவமழை தான் பெய்கிறது. அப்படியே வெள்ளம் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.

கடந்த 2015–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் அதிக வெள்ளம் சூழ வாய்ப்பு உள்ளதாக 274 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து 13 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உறுப்பினர்களாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புதுறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அந்த 274 இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அடுத்த 3 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால், மண்டல அளவிலான குழுக்களை, வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களுக்கு சென்று தங்குமாறு உத்தரவிட்டு உள்ளேன்.

அனைத்து கிராமங்களிலும் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகள் தங்கியிருக்க வேண்டும். அரசு ஊழியர்களும், காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் எவ்வித முன் அனுமதியும் இன்றி விடுப்பு எடுக்கக்கூடாது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்.

ஒருவேளை மழை அதிகமாக பெய்து வெள்ளம் சூழ்ந்தால், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைத்து உணவு சமைத்து கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 28 புயல் பாதுகாப்பு மையங்களையும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களையும் தயார்நிலையில் வைத்துள்ளோம்.

நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் 5,867 மெட்ரிக் டன் அரிசியும், 1,288 மெட்ரிக் டன் சீனியும், 170 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரே‌ஷன்கடைகளிலும் இந்த மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அடைப்பதற்கு 80 ஆயிரம் மணல் மூட்டைகளும், 6,507 சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.. மின்வினியோகம் பாதிக்கப்பட்டால் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிப்பதற்கு ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளில் 119 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

மீட்புப்பணிக்காக 28 படகுகளும், 56 நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். கடலூரில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிக்கு காவல்துறைக்கு சொந்தமான பைபர் படகுகள் பயன்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் பகுதியில் வெள்ளபாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் மீட்பு பணிக்கு தீயணைப்பு துறைக்கு சொந்த மான படகுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

கடலூரில் மழை வெள்ளம் சூழ வாய்ப்புள்ள கோண்டூர், வில்வநகர், சுத்துகுளம், புருசோத்தமன் நகர், பீமாராவ் நகர் மற்றும் பாதிரிக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு வட்டார அளவிலான குழுவை தவிர்த்து சப்–கலெக்டர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை நியமித்து உள்ளோம்.

இதேப்போல் விசூர், பெரியகாட்டுப்பாளையம், கல்குணம், பூதம்பாடி ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நிலையிலான ஒரு அதிகாரியையும், குமராட்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நிலையிலான ஒரு அதிகாரியையும், பரங்கிப்பேட்டை பகுதிக்கு சிதம்பரம் உதவி கலெக்டரையும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து உள்ளோம்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும் என்று அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குண்டியமல்லூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்ததால், கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த உடைப்பை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இன்றைக்குள்(அதாவது நேற்று) சரி செய்து விடுவதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது, மருத்துவக்குழுவினர் நன்றாக பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.


Next Story