சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் கரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு


சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் கரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 9:54 PM GMT (Updated: 5 Oct 2018 9:54 PM GMT)

சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் கரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சோமரசம்பேட்டை,

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி தடுப்பணை அருகில் இருந்து பிரிந்து செல்லும் காவிரியின் கிளை வாய்க்கால் சித்தலவாய், மகாதானபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை வழியாக பெட்டவாய்த்தலை வரை உள்ள பாசன நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் தெற்கு கரையை ஒட்டி வருவதால் இது தென்கரை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. அதன்பின் பெட்டவாய்த்தலையில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் உய்யகொண்டான் வாய்க்கால் என்று அழைக்கப்பட்டு நங்கவரம், பெருகமணி, கோப்பு, குழுமணி, எட்டரை, வயலூர், சோமரசம்பேட்டை வழியாக திருச்சி மாநகர் வழியாக வாழவந்தான் கோட்டை வரை சென்று அப்பகுதியில் உள்ள நிலங்களின் பாசன ஆதாரமாக இருந்து வருகிறது.

கடந்த 1977 மற்றும் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சோமரசம்பேட்டையில் இருந்து வயலூர் வரையும், எட்டரையில் இருந்து குழுமணி வரையும் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு உடைந்த கரை பகுதிகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க உறுதியான தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை

இந்த நிலையில் சோமரசம்பேட்டையில் இருந்து கோப்பு வரையில் உள்ள சுமார் 7கிலோமீட்டர் தூரம் உய்யகொண்டான் வாய்க்கால் கரை தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு கரைப்பகுதி சற்று கீழே சரிந்தது.நேற்று முன்தினம் பெய்த மழையில்அந்த கரைப்பகுதி மேலும் ஈரமாகி இருந்தது.

உய்யகொண்டான் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் சோமரசம்பேட்டையில் இருந்து வயலூர் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் கரை நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று சிறிது தூரத்துக்கு சரிந்தது.இந்த சரிவு ஏற்பட்ட பகுதி ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட இடமாகும். கரை சரிந்த போது கரையோரம் இருந்த சில சிறிய மரங்களும் வாய்க்காலுக்குள் விழுந்தன.

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு படி அதிக மழை பெய்து வாய்க்காலில் அதிக அளவு மழைநீர் வந்தால் கரை பகுதி மேலும் சேதமடையும் என்று பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் சேதம் அடையாமல் இருக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story