வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி டிரைவர் கைது


வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2018 10:57 PM GMT (Updated: 5 Oct 2018 10:57 PM GMT)

அறந்தாங்கி அருகே அண்ணனை பள்ளிக்கு வழியனுப்பியபோது பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி யானான். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தை சேர்ந்தவர் அஜ்மல்கான். இவருக்கு முகமது ஆதின் (வயது 5). முகமது அய்மான் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் முகமது ஆதின் அறந்தாங்கியில் உள்ள ஷிபா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். தினமும் பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல நேற்றும் முகமது ஆதின் பள்ளிக்கு புறப்பட்டான். அப்போது பள்ளி வேன் வீட்டிற்கு அருகே வந்து நின்றது. பள்ளிக்கு செல்லும் அண்ணனை வழியனுப்புவதற்காக முகமது அய்மானும் வந்தான். இந்தநிலையில் முகமது ஆதின் வேனில் ஏறினார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த முகமது அய்மான் திடீரென வேனின் முக்க பக்கத்திற்கு ஓடினான். இதை கவனிக்காத டிரைவர் வேனை முன்னோக்கி ஓட்டினார்.

இதில் வேனின் முன் சக்கரத்தில் சிக்கி முகமது அய்மான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான். இதைக்கண்ட அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் முகமது அய்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவர் அறிவழகன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story