தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி பேட்டி


தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2018 5:00 AM IST (Updated: 6 Oct 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை அடுத்த ஆண்டு முழுமையாக சீரடையும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காவல்துறையின் 55-வது ஆண்டு உதயதின நிறைவு விழா நேற்று மாலை 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார். கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அனந்தராமன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் முடிவில் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுவையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்கள் கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையை வரவேற்று மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதனை உடனடியாக சரிசெய்யவும், மழை பாதிப்புகளை கண்காணிக்கவும் நாள்தோறும் 2 அரசு செயலாளர்கள் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை அடுத்த ஆண்டு முழுமையாக சீரடையும். இதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை பல்கலைக்கழகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் காலாப்பட்டு மத்திய சிறை உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எனக்கு வருகிறது. அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள விளையாட்டு திடல், இருக்கை, அறைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். விளையாட்டு துறை அதிகாரிகள் அனைவரும் இன்று(சனிக்கிழமை) காலை கவர்னர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆய்வின்போது கல்வித்துறை இயக்குனர் குமார், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய பொறுப்பாளர் முத்துகேசவலு மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story