மெஞ்ஞானபுரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை


மெஞ்ஞானபுரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி  சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2018 3:30 AM IST (Updated: 6 Oct 2018 8:12 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர்.

மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர்.

சடையநேரி கால்வாய்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் அணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் கடைமடை குளங்களாக சடையநேரி குளம், புத்தன்தருவை குளம் அமைந்துள்ளன. பல ஆண்டுகளாக இந்த குளங்கள் நிரம்பாததால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே மழைக்காலங்களில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி, வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சடையநேரி கால்வாயில் திறந்து விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையநேரி குளம், புத்தன்தருவைகுளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் நிறுத்தம்

சடையநேரி கால்வாயானது மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் இருந்து சடையநேரி குளத்துக்கும், புத்தன்தருவை குளத்துக்கும் இரண்டாக பிரிந்து செல்கிறது. சடையநேரி குளத்துக்கு முன்பாக ஆணையூர் வரையிலுமே சடையநேரி கால்வாய் தோண்டப்பட்டு உள்ளது. அதன் பின்பு மண்மேடுகள் நிறைந்தும், அவற்றில் விவசாயிகள் பயிரிட்டதாலும், சடையநேரி குளத்துக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை.

இதேபோன்று புத்தன்தருவை குளத்துக்கு செல்லும் கால்வாயிலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து உள்ளதால், அங்கும் போதிய தண்ணீர் செல்லவில்லை. தொடர்ந்து சடையநேரி குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில், பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயில் தோண்டப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

சாலைமறியலுக்கு முயற்சி

இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சடையநேரி கால்வாயில் சிறிதளவு தண்ணீர் வந்தது. அதனையும் நேற்று நிறுத்தி விட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி மெயின் ரோட்டில் சடையநேரி கால்வாயின் அருகில் சாலைமறியல் செய்வதற்காக கிராம மக்கள் திரண்டனர்.

உடனே சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், உத்திரகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரகுநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், சடையநேரி கால்வாயில் சில இடங்களில் அடைப்புகள் உள்ளன. அவற்றை மாலைக்குள் அகற்றி விட்டு, தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story