கைத்தறியில் நெசவு செய்யப்பட்ட திருக்குறளை உலக தமிழ் சங்க மாநாட்டில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


கைத்தறியில் நெசவு செய்யப்பட்ட திருக்குறளை உலக தமிழ் சங்க மாநாட்டில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
x
தினத்தந்தி 6 Oct 2018 10:30 PM GMT (Updated: 6 Oct 2018 8:13 PM GMT)

கைத்தறியில் நெசவு செய்யப்பட்ட திருக்குறளை உலக தமிழ் சங்க மாநாட்டில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கைத்தறியில் புதுமையை புகுத்தி வரும் 72 வயது முதியவர் கரூர் சின்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்,

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி(வயது 72). இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அந்த பாரம்பரிய தொழிலினை மேம்படுத்தும் பொருட்டும், அழிவில் இருந்து மீட்கவும் கைத்தறி நெசவில் அவர் பல்வேறு புதுமைகளை புகுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் பேனா, பென்சில் உள்ளிட்டவற்றின் உதவி இல்லாமல் கைத்தறி நெசவு மூலம் துணியில் 1,330 திருக்குறளையும் எழுதி தமிழின் பெருமையை தனது திறமையின் மூலம் உணர்த்துகிறார். இந்த நிலையில் வருகிற 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெறுகிற உலக தமிழ் சங்க மாநாட்டில் கைத்தறி பாரம்பரியத்தையும், தமிழின் பெருமையையும் உலகறிய செய்யும் வகையில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட திருக் குறளை அங்கு சமர்ப்பித்து காட்சிப்படுத்த வேண்டும். அதனை பாராளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு சின்னுசாமி மனு அனுப்பி இருந்தார். அதனை தொடர்ந்து இந்த மனுமீது உரிய பரிசீலனை செய்யப்பட்டு, கரூர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் வெற்றிசெல்வன் சார்பில் பதில் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கைத்தறி நெசவுத்தொழிலாளி வெங்கமேடு சின்னுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

1,330 குறளை கைத்தறி துணியில் வடிவமைப்பு செய்வதற்கு 3 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரம் புள்ளிகளை (எந்திர பயன்பாடின்றி) மையப்படுத்தி கை விரல்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். இந்த திருக்குறளை அமெரிக்காவில் நடக்கிற உலக தமிழ் சங்க மாநாட்டில் சமர்ப்பித்து காட்சிப்படுத்துவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு எல்லாம், அது அரசின் கொள்கை முடிவு ஆகும் என பதில் அனுப்பியுள்ளனர். எனவே தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கிறேன். மேலும் மருத்துவமனை, சிறைசாலை, கல்விக்கூடம், ராணுவம், காவல்துறை, இறைவழிபாட்டு ஆலயங்கள் உள்ளிட்டவற்றில் பெயர் பலகை வைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கைத்தறி வடிவமைப்பு துணிகளை பயன் படுத்த வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்குவதற்கு பதில் நெசவு போர்வைகளை கொள்முதல் செய்து அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story