மணல் கடத்தல்: தடுக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி


மணல் கடத்தல்: தடுக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 6 Oct 2018 10:30 PM GMT (Updated: 6 Oct 2018 8:16 PM GMT)

மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே நத்தமேடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காணை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று நத்தமேடு பகுதிக்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை போலீசார் வழிமறித்தனர். ஆனால் லாரியில் வந்த 3 பேர் லாரியை நிறுத்தாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மீது மோதுவதுபோல் வந்தனர். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார்.

பின்னர் போலீசார் அந்த லாரியை வழிமடக்கி அதில் வந்தவர்களில் 2 பேரை பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் விழுப்புரம் அருகே பேரங்கியூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 24), தெளி கிராமத்தை சேர்ந்த சதீஷ் (20) என்பதும் தப்பி ஓடியவர் நத்தமேட்டை சேர்ந்த செல்வம் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து தெளி பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story