காரைக்குடியில் மருத்துவம், சட்டக்கல்லூரி தொடங்கப்படும்; அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் பேட்டி
காரைக்குடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழக ஆயுட்கால ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான டாக்டர் உமையாள் ராமநாதன் பிறந்தநாள் விழா அழகப்பர் கல்விக்குழுமங்களில் மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நடைபெற்றது.
விழாவையொட்டி காரைக்குடி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து வள்ளல் அழகப்பர் சிலை வரை சென்று மீண்டும் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் நடைபெற்றது. இதில் 600–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டியை அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் ராமநாதன்வைரவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின்னர் ரோட்டரி பியர்ல் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இலவச மருத்துவ முகாம், பெண்களுக்கான கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்டோ ரிக்ஷா, மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின் உள்ளிட்டவைகளை டாக்டர் உமையாள்ராமநாதன் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் ராமநாதன்வைரவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட வள்ளல் அழகப்பர் வழியில் சமூக சேவையை எங்கள் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். வள்ளல் அழகப்பர் கல்விக்குழுமம் சார்பில் காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை விரைவில் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.