வாலாஜாபாத் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


வாலாஜாபாத் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 10:05 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வாலாஜாபாத் தாலுகா முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் படிவங்களை பெற வந்த பொதுமக்களிடம் படிவங்கள் குறித்த விழிப்புணர்வு குறித்தும், படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த சிறப்பு முகாமில் பணிபுரிந்து வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நியமன அலுவலர்களிடமும் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோல் ஐயம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் ) ரவிச்சந்திரன், வாலாஜபாத் தாசில்தார் கிரி ராணி, துணை தாசில்தார் ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்மலா, வேதகண்ணு மற்றும் அரசு அலுவலர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதி வாக்காளர் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்.டி.ஓ. நந்தகுமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் நேற்று அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கூட்டுறவு சங்க இயக்குனர் பொன்னுதுரை, நகரசெயலாளர் உபயதுல்லா உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில் வாக்காளர் சரி பார்த்தல் பணி அலுவலர்களிடம் சேர்த்தல், நீக்கல் பணிகள் குறித்த விவரங்களை உரிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளதா என்று சரி பார்த்தனர்.

கல்பாக்கம் அணு சக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் சுமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி பூதத்தான் மற்றும் பணியாளர்கள் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தனபால் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் காதர் உசேன், பாபு ஆகியோர் முகாமுக்கு வந்து பார்வையிட்டனர்.

Next Story