கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 6 பேர் கைது

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுமித்ரா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது ஆர்.ஜி.நகர் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த கிஜாஸ் (வயது 21), ஆழப்புழையை சேர்ந்த அஸ்வின் ராஜ் (21), கோழிக்கோட்டை சேர்ந்த சானு (21), வடகரையை சேர்ந்த அஸ்வின் (21), கொல்லத்தை சேர்ந்த அஜீஸ் (21), அம்ஜித் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் ஆர்.ஜி.நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கஞ்சாவை பதுக்கி வைத்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சா, ரூ.35 ஆயிரம் ரொக்கம், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.