பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயில் என்ஜின் பராமரிப்பு பணி தீவிரம்


பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயில் என்ஜின் பராமரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 7:39 PM GMT)

திருச்சி பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயில் என்ஜின் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாத (அக்டோபர்) இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் பெயர் பெற்றது. மலைப்பாதையில் ரெயில் கடந்து செல்லும் அழகே தனிச்சிறப்பாகும்.

தொடக்கத்தில் நீராவி என்ஜினால் ஊட்டி மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரெயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரெயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டி மலை ரெயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரெயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு வந்தது. பணிமனையில் என்ஜினை ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியின் போது என்ஜின்களில் ஒவ்வொரு பாகத்தையும் முழுவதுமாக பிரித்து அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என பார்வையிட்டும், மாற்ற வேண்டிய பாகங்களை மாற்றியும் வருகின்றனர். ரெயில் என்ஜினை புதுப்பொலிவு பெறும் வகையில் முழுமையாக மாற்றி வருகின்றனர். இந்த பராமரிப்பு பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதம் (அக்டோபர்) இறுதிக்குள் பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என பணிமனை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story