நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் ஓடை, கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து நாகமலைபுதுக்கோட்டையில் ஓடை, வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனி மற்றும் கரடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்.ஜி. நகர், திருவேணி நகர், பாரதியார் நகர், கல்வி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகள் விவசாய நிலங்களாக இருந்த நிலையில், தற்போது பெரும்பாலான நிலங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. விவசாய பகுதியாக இருந்தபோது மழை காலங்களில் நாகமலையில் இருந்து வரும் மழைநீர் பல்வேறு ஓடைகள், வரத்துக்கால்வாய் வழியாக சிவலிங்கம்பட்டி, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, ஆலம்பட்டி, வடபழஞ்சி கண்மாய்களை சென்றடைந்தன. ஆனால் தற்போது குடியிருப்புகளாக மாறிவிட்டதால் ஓடைகள் இருந்தது தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் உரிய வரத்துக்கால்வாய், வடிகால் இன்றி கண்மாய்களுக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில் சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய், குளங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நாகமலைபுதுக்கோட்டை, கரடிபட்டி பகுதிகளில் பாரம்பரிய ஓடைகளை சீரமைக்கவும், குடியிருப்புகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று நாகமலைபுதுக்கோட்டை, கரடிப்பட்டி, மேலகுயில்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரத்துக்கால்வாய், ஓடைகள் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்றினர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மண் மேடுகளை அகற்றி வாய்க்காலை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.