‘‘மழை தான் காரணம்’’ தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நிறுத்தம் என்பது தவறானது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
திருப்பரங்குன்றம் இடைத்தேர்ர்தல் நிறுத்தப்பட்டதற்கு மழை தான் காரணம். தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நிறுத்தம் என்பது தவறானது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை முனிச்சாலை பகுதியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் அ.தி.மு.க. நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும். இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய் இருக்கும். தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் ஆட்சி மீது அவதூறு பேசுவதை நிறுத்தி இருப்பார். மழை காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு இருப்பதால், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சொன்னதால் தான் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் நினைத்தால் இடைத்தேர்தலை நடத்தலாம். இதற்காக தமிழக அரசை கேட்க வேண்டியதில்லை. பாராளுமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தலை கண்டு அ.தி.மு.க.வும், தொண்டர்களும் பயப்பட்டது கிடையாது. பயத்தால் தேர்தல் நிறுத்தம் என்பது தவறானது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. தவறு நடந்தால் அவர் தட்டி கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.