அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்


அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 8 Oct 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை போட்டித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு நெட், செட் மற்றும் பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு நெட், செட் மற்றும் பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. சங்க மாநில தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் போது பள்ளி கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் நெட், செட், பி.எச்.டி. முடித்து தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் பணி காலத்தை முறையான பணி காலமாக கணக்கில் கொண்டு உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது அதற்கான மதிப்பெண் (ஓராண்டிற்கு 2 மதிப்பெண்) வழங்க வேண்டும்.

அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை போட்டித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 21-ந்தேதி தமிழ்நாடு நெட், செட் மற்றும் பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஊர்வலம் நடைபெறும். இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர்கள் செல்வராஜ், மாயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முரளி வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட தலைவர் அன்புமணி நன்றி கூறினார்.

Next Story