ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது


ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது
x
தினத்தந்தி 8 Oct 2018 3:30 AM IST (Updated: 8 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் தீவுப் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

ராமேசுவரம்,

அரபிக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன் தினம் இரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் மழை இல்லாமல் இருந்தது. பலத்த மழையால் ராமேசுவரம் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக புகுந்த வெள்ளநீர் ஆஞ்சநேயர் சன்னதி வரையிலும் பிரகாரத்தில் அதிக அளவில் தேங்கி நின்றது.

இதே போல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம், அம்பாள் சன்னதி கொடி மர பிரகாரம் பகுதியிலும் மழை நீர் தேங்கி நின்றது. கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீரானது கோவில் பணியாளர்களால் வெளியேற்றப்பட்டது.

இதேபோல் தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பும் மற்றும் விக்டோரியா நகர் பகுதியிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதே போல் ராமநாதபுரத்திலும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து மின்சாரம் தடைபட்டது. 5–க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததாலும், அதனை உடனடியாக வெட்டி சரிசெய்வதற்கு முடியாத வகையில் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததாலும் மின்பணியாளர்கள் பழுதை சரிசெய்ய முடியாமல் போனது.

இதன்காரணமாக 13 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதால் ராமநாதபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கின.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:– கடலாடி–12.8, கமுதி– 33, ராமநாதபுரம்–54, பள்ளமோர்குளம்–4.5, பாம்பன்–41.1, தீர்த்தாண்டதானம்–15, ஆர்.எஸ்.மங்கலம்–54, வாலிநோக்கம்–12.8, பரமக்குடி–16.2, திருவாடானை–23.2, தொண்டி–15.2, வட்டாணம்–6, முதுகுளத்தூர்–28.8, மண்டபம்–39, ராமேசுவரம்–56.2, தங்கச்சிமடம்–45.2.


Related Tags :
Next Story