தீக்குளித்து பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் பலியான பரிதாபம்


தீக்குளித்து பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 8 Oct 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி உயிரிழந்தார்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலகஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சுரேஷ்(வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நளினி(30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

சுரேஷ் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் ஆவார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுரேஷ் வீட்டுக்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த நளினி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த சுரேஷ் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது உடலிலும் தீ பற்றியது. இதனால் கணவன், மனைவி இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ், நளினி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து நளினியின் தாய் தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story