மஞ்சள் காமாலையால் இறந்து போன மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பெற்றோர்


மஞ்சள் காமாலையால் இறந்து போன மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பெற்றோர்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:36 PM GMT (Updated: 7 Oct 2018 11:36 PM GMT)

ராய்ச்சூர் அருகே மஞ்சள்காமாலையால் இறந்த மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து பெற்றோர் வழிபட்டு வருகிறார்கள்.

பெங்களூரு,

ராய்ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவர் சிற்பி ஆவார். இவருடைய மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார். 19 வயது நிரம்பிய நிலையில் விஜயக்குமார் மஞ்சள்காமலையால் பாதிக்கப்பட்டு இறந்தார். விஜயக்குமாரின் இறப்பு ஈரண்ணா-ஈரம்மா தம்பதியை பெரிதும் பாதித்தது.

இந்த நிலையில், மகன் மீது கொண்ட அதிகளவிலான பாசத்தின் காரணமாக ஈரண்ணா, தனது மகன் விஜயக்குமாரின் உருவத்தை மனதில் வைத்து சிலையாக வடித்தார். 5 அடி 3 இன்ச் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள விஜயக்குமாரின் சிலையை வீட்டில் வைத்து தினமும் ஈரண்ணா-ஈரம்மா தம்பதி வழிபட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஈரண்ணா-ஈரம்மா ஆகியோர் கூறியதாவது:-

எங்கள் மகன் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தான். 6 வயதிலேயே அவன் சிறப்பாக ஓவியம் வரைய தொடங்கினான். அவன் வரைந்த பல்வேறு படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றதோடு, அந்த படங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களின் மகனை இழந்துவிட்டோம். வீட்டில் வைக்கப்பட்டுள்ள எங்கள் மகனின் சிலைக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து தினமும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகிறோம். அப்போது அவனிடம் எங்களை ஆசிர்வதிக்கும்படி கேட்டு கொள்வோம். இது எங்களுக்கு மனநிம்மதியை கொடுக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் எங்களின் மகன் எங்களுடனேயே வாழ்வது போன்று உள்ளது. எங்களுக்கு என்ன பிரச்சினைகள் வந்தாலும் கூட அவனிடம் அதை தீர்த்து வைக்கும்படி வேண்டி கொள்வோம். அவன் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பான்.

இவ்வாறு அவர்கள் கண்களில் கண்ணீர் பொங்க கூறினார்கள்.

Next Story