மகாளய அமாவாசை: திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்


மகாளய அமாவாசை: திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:30 PM GMT (Updated: 8 Oct 2018 5:16 PM GMT)

மகாளய அமாவாசையையொட்டி திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருவள்ளூர்,

மகாளய அமாவாசையையொட்டி நேற்று திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவபெருமாள் கோவிலில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள், கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் சில மணிநேரம் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவே திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூர் வந்து வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்தனர். பக்தர்கள் குவிந்ததால் நேற்று திருவள்ளூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சர்வதீர்த்த குளம், கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயாரம்மன் கோவில் குளம், காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளம் உள்பட முக்கிய கோவில் குளங்களில் பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் மற்றும் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் ஏராளமான பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story