கோவில்பட்டியில், ஆசிரியை வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை


கோவில்பட்டியில், ஆசிரியை வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 9 Oct 2018 3:00 AM IST (Updated: 8 Oct 2018 11:32 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் சாமித்துரை (வயது 42). இவர் கோவில்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லில்லி சாரா (40). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி 2 பேரும் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 11 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

மதியம் வீட்டுக்கு திரும்பி வந்த லில்லி சாரா வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story