நடத்தையில் சந்தேகம்: டி.வி.யை தலையில் தூக்கிப்போட்டு மனைவி படுகொலை, ஆட்டோ டிரைவர் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு டி.வி.யை தலையில் தூக்கிப் போட்டு மனைவியை படுகொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை தெலுங்குபாளையம் சுப்பிரமணியபுரம் வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சேகர், ஆட்டோ ஓட்டி முடித்த பின்னர் குடித்து விட்டுதான் வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சேகர், அவரை தினமும் அடித்து உதைத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகன்யா கோபித்துக்கொண்டு குழந்தைகளு டன் கோவையை அடுத்த மாகாளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் கடந்த 23–ந் தேதி மாகாளிபாளையத்துக்கு சென்ற சேகர் தனது மனைவியை சமாதானப் படுத்தி தெலுங்குபாளையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் இறைச்சி எடுத்துக்கொடுத்து சமையல் செய்து வைக்கும்படி கூறிவிட்டு அவர் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். அன்று மாலை 4 மணிக்கு சேகர் வீட்டிற்கு வந்தபோது, சுகன்யா தனது உறவினரான ஒரு வாலிபரிடம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வாலிபர், சேகரை பார்த்ததும் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி.யை தூக்கி சுகன்யாவின் தலையில் போட்டார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் டி.வி.யும் சுக்குநூறாக நொறுங்கியது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத சேகர் வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து சுகன்யாவின் முழங்காலில் அடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சுகன்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுகன்யா நேற்று காலை 11 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் கடந்த 24–ந் தேதி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது சுகன்யா இறந்து விட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன் சேகரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக சேகர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
நான் எனது மனைவி மீது அதிகளவில் பாசம் வைத்திருந்தேன். ஆனால் அவர் என் மீது பாசம் வைக்க வில்லை. அவருடைய உறவினரான 25 வயது வாலிபருடன் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தார். இது தொடர்பாக நான் பலமுறை கூறியும் கேட்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் கடந்த 23–ந் தேதி தான் நான் எனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தேன். நான் வெளியே சென்றதும், அவர் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
மாலையில் நான் வீட்டிற்கு வந்தபோது என்னை பார்த்ததும், அந்த வாலிபர் வெளியே ஓடி விட்டார். இதனால் எனது மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டது. எனவே வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வியை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.