கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி; உரிமையாளரை, பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்தனர்


கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி; உரிமையாளரை, பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 9 Oct 2018 4:45 AM IST (Updated: 8 Oct 2018 11:50 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்த அந்த நிறுவன உரிமையாளரை பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை,

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம், சிவதங்கம் நகர் பகுதியில் ‘சிவசூர்ய கிருஷ்ணா சிட்ஸ்’ என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை கேரளாவை சேர்ந்த முரளீதரன் (வயது52) என்பவர் நடத்தி வந்தார். இதன் கிளை நிறுவனங்கள் கோவை பூமார்க்கெட், அன்னூர் சத்தியமங்கலம், பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்தன.

மாதந்தோறும் பணம் செலுத்தும் திட்டம், தினமும் பணம் செலுத்தும் திட்டம் உள்பட பல திட்டங்களில் ஏராளமானவர்கள் பணத்தை செலுத்தி வந்தனர். ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என்று 4 வகையான ஏலச்சீட்டுகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 1,700 பேர் கோடிக்கணக்கில் பணம் கட்டியதாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீட்டு நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் திடீரென்று மூடப்பட்டன. இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சீட்டு நிறுவன உரிமையாளர் முரளீதரனிடம் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து வந்தார். இதையடுத்து அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனவே பணம் செலுத்தி ஏமாந்தவர்கள், கோவை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று கோவை தடாகம் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்த ஏலச்சீட்டு உரிமையாளர் முரளீதரனை பார்த்த சிலர், அவரை மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவரை கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள கோவை நகர குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து சீட்டு நிறுவன உரிமையாளர் மீது 20–க்கும் மேலானவர்கள் புகார் மனு அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் முரளீதரனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ஏலச்சீட்டு நடத்தி ஏராளமானவர்களிடம் ரூ.2½ கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் முரளீதரன் பணியாற்றியுள்ளார். அப்போது, சீட்டு நிறுவனம் செயல்படும் நிலவரம் குறித்து விவரங்கள் அறிந்து கொண்ட பிறகு தானே ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒழுங்காக பணத்தை வட்டியுடன் திரும்ப ஒப்படைத்த அவர், பின்னர் ஏராளமானவர்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்ய தொடங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட முரளீதரன் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நேற்று இரவு அவரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

அவரிடம் இருந்து கார், செல்போன், சீட்டு நிறுவனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த பலர் வெளியூர்களை சேர்ந்தவர்கள். அவர்களும் புகார் அளித்து வருகிறார்கள்.

இந்த சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் கூறியதாவது:–

ஆரம்பத்தில் சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிறுவனத்தின் பதிவை அரசு அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். ஆனாலும் பழைய பதிவு எண்ணை வைத்து தொடர்ந்து சீட்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஏராளமானவர்கள் பணம் செலுத்தி ஏமாந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நிறுவன பதிவை ரத்து செய்த உடன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் ஏராளமானவர்கள் பணம் செலுத்தி ஏமாந்து இருக்கமாட்டார்கள். மேலும் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, சீட்டு நிறுவன உரிமையாளரின் சொத்துகள் அனைத்தையும் முடக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story