முதுனாள் கிராமம் அருகே ஊருணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் பாதிப்பு


முதுனாள் கிராமம் அருகே ஊருணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 8 Oct 2018 6:52 PM GMT)

ராமநாதபுரத்தை அடுத்துள்ள முதுனாள் கிராமம் அருகே ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை பெரிய கண்மாயில் இருந்து இடையர்வலசை அய்யர்மடம் ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் சுமார் 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் வழியாகத்தான் பெரிய கண்மாயில் இருந்து அய்யர்மடம் ஊருணிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வீடு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதால் ஊருணிக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாய் வழியாக களத்தாவூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். தற்போது இந்த ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் சூரங்கோட்டை, முதுநாள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிஉள்ளது. வாய்க்கால் அடைபட்டுஉள்ளதால் இந்த தண்ணீர் அப்படியே தேங்கி நிற்பதுடன் குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக பார்வையிட்டு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி மழைநீர் சீராக ஊருணிக்கும், விவசாய நிலங்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் முதுனாள் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


Next Story