சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 8 Oct 2018 10:30 PM GMT (Updated: 8 Oct 2018 7:03 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மேட்டூர் காவேரிபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 53) என்பவர் வந்தார். பின்னர் அவர் திடீரென தனது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைபார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக வேனில் ஏற்ற போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் பூங்கொடி வண்டியில் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, எனது வீட்டின் அருகே நடைபாதை உள்ளது. இதை ஒருவர் ஆக்கிரமித்து சுவர் கட்டி விட்டார். வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்த சர்வீஸ் லைனை மற்றொருவர் சேதப்படுத்தி விட்டார். இது குறித்து பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் அவர் கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல், அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் (42) என்பவர் மனு கொடுப்பதற்காக வந்தார். அவர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கட்ட போலீசாரின் சோதனைக்கு இடையே மண்எண்ணெய் கேனை மறைத்து உள்ளே கொண்டு வந்தார். பின்பு முருகேசன் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த போலீசார் ஓடி வந்து கேனை பிடுங்கியதுடன், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ரூ.5 லட்சம் கேட்டதுடன், அவருடைய 2 மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதை நம்பி நான் ரூ.5 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை, அவருடைய பெண்ணையும் திருமணம் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து நான் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மல்லூர் வாழக்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த தீபா (35) என்ற பெண் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் வைத்து யாரும் எதிர்பாராத வகையில் மண்எண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்பு போலீசார் ஓடி வந்து கேனை பிடுங்கியதுடன், அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின்பு விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமை மற்றும் அவருடைய நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் அடுத்தடுத்து பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story