கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி ஏரியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி ஏரியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 7:24 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணா நதி கால்வாயில் பொதுமக்கள் குளிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கடந்த 29-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன்பிறகு தண்ணீர் வரத்து அதிகமாகியது. தற்போது வினாடிக்கு 706 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர், ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடும் மதகுகளை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியில் வந்து சேரும் பகுதிக்கு சென்று பார்த்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

குளிக்காமல் தடுக்க நடவடிக்கை

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

எனவே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் பொதுமக்கள் யாரும் குளிக்காமலும், துணி துவைக்காமலும் தடுக்க அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேபி கால்வாய்

பின்னர் அவர், பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாய், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் இணைப்பு கால்வாயையும் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story