கொள்முதல் செய்யாததால் மழையினால் முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்


கொள்முதல் செய்யாததால் மழையினால் முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 8 Oct 2018 9:30 PM GMT (Updated: 8 Oct 2018 7:25 PM GMT)

கொள்முதல் செய்யாததால் மழையினால் முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் தஞ்சை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர், 


தஞ்சையை அடுத்த வயலூர் நரசநாயக்கபுரம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வயலூர், ராமாபுரம், குருவாடி, தோட்டக் காடு, சாரப்பள்ளம், கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை கடந்த 10 தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் விவசாயிகள் சாலை ஓரங்களிலும், கொள்முதல் நிலையத்தின் முகப்பிலும் நெல்லை கொட்டி சாக்குகளை போட்டு மூடி வைத்து பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 தினங்களுக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக கொள்முதல் நிலையம் முன்பு வைத்திருந்த நெல் நனைந்து முளைத்து விட்டது. இதுநாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க கவுரவத்தலைவர் தர்மராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டு தஞ்சை-கும்பகோணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மழையால் நனைந்து முளைத்து போன நெல்லை சாலையில் கொட்டியும், நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் அறுவடை செய்யாமல் உள்ள நெற்கதிர்களையும் சாலையில் போட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story