திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நொண்டிசாக்கு கூறி தள்ளி வைத்துள்ளனர் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தாக்கு
நொண்டிசாக்கு கூறி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரெங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை ரெயின்போ நகர் 12–வது குறுக்கு தெருவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரெங்கசாமி திறந்துவைத்து கட்சிக்கொடியேற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் சுத்துக்கேணி பாஸ்கர், துணைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம், உமாமோகன், துணை செயலாளர்கள் சுப்ரமணியன், பிரபுதாஸ், செந்தில்முருகன், நகர செயலாளர் நாக.லோகநாதன், பிற அணி செயலாளர்கள் தமிழ்மாறன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து பொருளாளர் ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 2½ கோடியாக உயரும். ஆனால் அ.தி.மு.க.வில் 50 லட்சம்பேர்தான் உறுப்பினர்களாக உள்ளனர்.
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது எங்களிடம் கூறிவிட்டுதான் டி.டி.வி. கலந்துகொண்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பும் டி.டி.வி. தினகரனை சந்திக்க துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டு இருந்தார். அவரை நம்பி வந்த அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் இதுகுறித்து பேசாமலே அவர் டி.டி.வி. தினகரனுடன் பேசியுள்ளார். இதன் காரணமாக அவர் இப்போது இக்கட்டில் சிக்கியுள்ளார்.
அ.தி.மு..க. தொண்டர்கள் அப்பாவிகள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம் இருப்பதால் அங்கு உள்ளனர். உண்மை தெரியும்போது அவர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் வருவார்கள். அப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஊழல் அமைச்சர்களை சேர்க்கமாட்டோம்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் வெற்றிபெறும். இதை உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டனர். எனவேதான் மழைக்காலம் என்று நொண்டிசாக்கு கூறி தேர்தலை தள்ளிவைத்துள்ளனர். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெறும்.
18 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பக்கம் வருவார்கள் என்று அவர்கள் பேசிவருகிறார்கள். தகுதி நீக்க வழக்கில் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி. ஏற்கனவே எடியூரப்பா வழக்கில் முதல்–அமைச்சரை மாற்ற சொல்வது கட்சி தாவல் நடவடிக்கை அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.