பெருந்துறை அருகே குளோரின் வாயு கசிந்த சிலிண்டர் குழிக்குள் போட்டு மூடப்பட்டது: குடோன் உரிமையாளர் மீது வழக்கு


பெருந்துறை அருகே குளோரின் வாயு கசிந்த சிலிண்டர் குழிக்குள் போட்டு மூடப்பட்டது: குடோன் உரிமையாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Oct 2018 9:45 PM GMT (Updated: 8 Oct 2018 8:26 PM GMT)

பெருந்துறை அருகே குளோரின் வாயு கசிந்த சிலிண்டர் குழிக்குள் போட்டு மூடப்பட்டது. பாதுகாப்பற்ற முறையில் வைத்ததாக குடோன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெருந்துறை, 


பவானியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெருந்துறை மடத்துப்பாளையம் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் கம்பி வேலி அமைத்து பழைய இரும்புகளை உடைக்கும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு இரும்பு உடைப்பதற்காக குளோரின் சிலிண்டர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்து நேற்று முன்தினம் இரவு குளோரின் வாயு கசிந்தது. இதனால் அந்த குடோனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சிலிண்டரில் இருந்து வெளியேறிய குளோரின் வாயுவை கட்டுப்படுத்த முயன்றனர். இதில் தீயணைப்பு வீரர்கள் முருகன், பூபதி ஆகியோருக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குடோன் வளாகத்தில் தோண்டப்பட்ட குழிக்குள் போட்டு சிலிண்டர் மூடப்பட்டது. இந்த நிலையில் குளோரின் வாயுவை முழுவதுமாக அந்த சிலிண்டரில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேட்டூரில் உள்ள, கெம்பிளாஸ்ட் என்ற நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் விஜயபாஸ்கர் தலைமையில், 3 வீரர்கள் பெருந்துறை வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் சிலிண்டர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே மற்றொரு குழி ஆழமாக தோண்டி அதில் பாலித்தீன் தார்ப்பாய் விரிக்கப்பட்டு, அதற்குள் சுண்ணாம்பு மற்றும் தண்ணீர் கரைசல் ஊற்றப்பட்டது. அதன்பின்னர், புதைக்கப்பட்ட குழியில் இருந்த அந்த சிலிண்டர் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டு, பாதுகாப்பாக சுண்ணாம்பு கரைசல் குழிக்குள் போடப்பட்டு மூடப்பட்டது.

பாதுகாப்பற்ற முறையில் குடோனில் சிலிண்டர் வைத்திருந்ததாக உரிமையாளர் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story