குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பு மனுக்கள் பரிசீலனை


குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பு மனுக்கள் பரிசீலனை
x
தினத்தந்தி 9 Oct 2018 4:00 AM IST (Updated: 9 Oct 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்பு மனுக்கள் பரிசீலனை போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

நாகர்கோவில்,

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஆவின், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட 9 கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இங்கு இரு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த 27 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையொட்டி மீனவர் கூட்டுறவு இணைய அலுவலகம் நேற்று காலையில் இருந்து மாலை வரை பரபரப்புடன் காட்சி அளித்தது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதேபோல் ஆவின் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அகஸ்தீஸ்வரம்- தோவாளை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலுக்கு 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இதில் ஒரு வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கல்குளம்- விளவங்கோடு தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 23 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குமரி மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் 2 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 32 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன.


Next Story