குமாரசாமி முன்னிலையில் நாளை தொடங்குகிறது வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா


குமாரசாமி முன்னிலையில் நாளை தொடங்குகிறது வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா
x
தினத்தந்தி 8 Oct 2018 11:45 PM GMT (Updated: 8 Oct 2018 10:15 PM GMT)

வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் எழுத்தாளர் சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார்.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா, வரலாற்று சிறப்புமிக்கது. விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி.1610-ம் ஆண்டு விஜய மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது கர்நாடகத்தின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. இதில் பாரம்பரிய நடனம், மல்யுத்தம் உள்பட கர்நாடகத்தின் வீர விளையாட்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய புகழ்பெற்ற தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்சத்தின் மன்னர்களால் ஆண்டுதோறும் சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது தற்போது மைசூரு தசரா விழாவாக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த தசரா விழாவின் போது மன்னர்கள் தங்க சிம்மாசனத்தின் மீது அமர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவைப்பார்கள். இது தசரா விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு மன்னர் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவுக்கு வரலாறு உள்ளது. மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுபோல் மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுக்கூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுவதாகவும் சொல்லப் படுகிறது.

இதனால் மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா விழா 10-ந்தேதி (நளை) தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை(புதன் கிழமை) மைசூரு தசரா விழா தொடங்குகிறது. அதாவது மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா விழாவை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார்.

விழாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், ஜெயமாலா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

அதன் பிறகு தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தசரா விழா தொடங்கிவைக்கப்பட்டதும் மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை அர்ஜுனா யானை சுமந்தப்படி ஊர்வலமாக மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபத்தை சென்றடையும்

அதன் பிறகு மற்ற யானைகளும், அலங்கார வாகனங்களும் அணிவகுத்து செல்லும். இந்த ஊர்வலத்தில் குதிரைப்படையினர், போலீசார், பேண்டுவாத்தியக் குழுவினர், நடனக்குழுவினர் உள்பட பல்வேறு கலைக்குழுவினரும் கலந்துகொள்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலத்தினரும், வெளிநாட்டினரும் என சுமார் 5 லட்சம் பேர் வருகைதருவார்கள்.

தசரா விழாவையொட்டி மைசூரு டவுன் நஜர்பாத்தில் உள்ள குப்பண்ணா பூங்காவில் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் அங்கு மலர்கண்காட்சி இன்று ெதாடங்குகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பம்சமாக கண்ணாடி மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வண்ண, வண்ண மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் மலர்களால் வனவிலங்குகள், தலைவர்களின் உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாளை மைசூரு தசரா விழா தொடங்குவதால் அனைத்துவிதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

மேலும் இதையொட்டி மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Next Story