பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மாணவ-மாணவிகள் போராட்டம்


பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:42 PM GMT (Updated: 8 Oct 2018 10:42 PM GMT)

நெமிலி அருகே பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு 1,342 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலையில் 9 பிரிவுகள், முதுகலையில் 5 பிரிவுகள் என மொத்தம் 14 பிரிவுகள் உள்ளன. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 70 பேர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

மேலும், பேராசிரியரை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகளை அச்சுறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

இதுகுறித்து ஏற்கனவே தகவல் அறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார் மாணவ, மாணவிகளிடம் கல்லூரிக்கு செல்லுமாறு கூறினர்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்ட கூடாது. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் சும்மா விடுவீர்களா என்றனர்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் கவிதா அங்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து, கல்லூரிக்கு சென்றனர்.

கல்லூரியில், மாணவ-மாணவிகளிடம் முதல்வர் கவிதா பேசுகையில், பேராசிரியர் மீது கலெக்டருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகத்துக்கு எந்தவித புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மாணவ-மாணவிகள் பேராசிரியர் மீது எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் கவிதா, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மாணவ-மாணவிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story