தாளவாடியில் பலத்த மழை; தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன


தாளவாடியில் பலத்த மழை; தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 9 Oct 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அடிப்பதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

தாளவாடி அருகே உள்ள சூசைபுரம், திகனாரை, காளிதிம்பம், தொட்டாபுரம், கெட்டவாடி, பாரதிபுரம், மாவள்ளம், கேர்மாளம், நெய்தாளபுரம், ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது.

மழையால் வனப்பகுதி முழுவதும் தற்போது பசுமை போர்த்தியதுபோல் அழகாக காட்சி அளிக்கிறது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

வனக்குட்டைகள், தடுப்பனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் காட்டாற்றின் குறுக்கே போதிய தடுப்பனைகள் இல்லாததால் மழை நீர் முழுவதும் கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சீறிப்பாய்ந்து சென்றது.

இந்த நிலையில் நேற்று காலை தாளவாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை விடாமல் பெய்தது.

தாளவாடி அருகே உள்ள கோடிபுரம், தலமலை, கெஜலெட்டி, நெய்தாளபுரம் ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் தாளவாடி ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாளவாடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் உருளைக்கிழங்கு, தக்காளி பயிர்கள் அழுக தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிங்கம்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தாறு, பூனாட்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11½ மணி வரை பலத்த மழை பெய்தது. புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நேற்று காலை சாரல் மழை பெய்தது.


Related Tags :
Next Story