பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு குற்றப்பின்னணி உள்ளவர்களால் மாண்பு குறைவதாகவும் வேதனை


பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு குற்றப்பின்னணி உள்ளவர்களால் மாண்பு குறைவதாகவும் வேதனை
x
தினத்தந்தி 10 Oct 2018 12:00 AM GMT (Updated: 9 Oct 2018 4:53 PM GMT)

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் என்றும், குற்றப் பின்னணி உள்ளவர்களால் மாண்பு குறைகிறது என்றும் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு வேதனை தெரிவித்தார்.

பெங்களூரு,

பாரத சாரண-சாரணியர் இயக்கம் சார்பில் தீனதயாள் நாயுடு பிறந்தநாள் நூற்றாண்டு விழா பெங்களூரு ஞானஜோதி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பள்ளி-கல்லூரிகளில் அறிவியல் இருக்கிறது. ஆனால் மனித மாண்புகள் குறைந்து வருகிறது. இளைஞர்களிடம், மனித வாழ்க்கை மாண்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். நமது நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் உள்ளன. நாம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் வாழ்கிறோம். இளைஞர்களிடம் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அவசியம்.

கல்லூரிகளில் பட்டம் பெற என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரண-சாரணியர் இயக்கம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் சேவையாற்றி இருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்.

தீனதாயள் நாயுடு, சாரண-சாரணியர் இயக்கத்தை தொடங்கினார். இதற்காக அவர் பல தியாகங்களை செய்தார். அவரது தியாகம் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களிடம் நல்ல குணம், திறமை, ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியம். அத்தகையவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்று பணம், சாதி, மதம் ஆகியவையே முக்கியமாக இருக்கிறது.

குற்றப் பின்னணி உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள், சாதி பலம் உள்ளவர்களே அதிகமாக பொதுவாழ்க்கைக்கு வருகிறார்கள். அவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது துரதிருஷ்டவசமானது. இதன் காரணமாக மாண்புகள் குறைந்து வருகின்றன.

இயற்கை மீது மனிதனின் தாக்குதல் இருக்கக்கூடாது. நதிகள், ஏரிகள், சாலைகள் என எதையும் விட்டு வைக்காமல், ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக தான் தமிழ்நாடு, கேரளா, குடகில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, பாதிப்புகள் உண்டாயின. இவற்றுக்கு மனிதர்கள் செய்த தவறே காரணம்.

பெங்களூருவின் நிலைமையும் அதே மாதிரி தான் உள்ளது. இங்கு தூய்மை மாயமாகிவிட்டது. பிரதமர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை அறிவித்துள்ளார். அதனால் பெங்களூரு ‘ஸ்மார்ட’் ஆகிவிடாது. முதல்-மந்திரி குமாரசாமியாலும் இது சாத்தியம் இல்லை.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும். ஆக்கிரமிப்புகளை முழுமையாக நிறுத்த வேண்டும். பெங்களூரு நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார். இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், என்.மகேஷ், சாரண-சாரணியர் இயக்க கர்நாடக மாநில தலைவர் பி.ஜி.ஆர்.சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story