போரூர் அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை


போரூர் அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

போரூர் அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் நிகேஷ் நல்லப்பிள்ளை (வயது 23). இவர் அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பாட்டி வாசுகியுடன் தங்கி போரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். இவரது தந்தை மணிவண்ணன் நல்லப்பிள்ளை. தந்தையும், தாயும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த நிகேஷ் நல்லப்பிள்ளை மிகுந்த மன விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நிகேஷ் நல்லப்பிள்ளை நேற்று முன்தினம் இரவு தான் வசித்து வந்த 7-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிகேஷ் நல்லப்பிள்ளை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், பெற்றோர் அமெரிக்காவில் வசித்து வந்ததால் நிகேஷ் நல்லப்பிள்ளை அங்குதான் படித்துள்ளார். இதனையடுத்து டாக்டராக ஆசைப்பட்ட அவர் மருத்துவ படிப்பிற்காக சென்னைக்கு வந்து பாட்டியுடன் தங்கி உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

மேலும், இவர் ஏற்கனவே ஒரு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. நிகேஷ் நல்லப்பிள்ளை எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story