தஞ்சை ரெயில் நிலையத்தில், 4, 5-வது நடைமேடைகள் விரிவாக்கப்பணி மும்முரம் 300 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளமும் சீரமைப்பு


தஞ்சை ரெயில் நிலையத்தில், 4, 5-வது நடைமேடைகள் விரிவாக்கப்பணி மும்முரம் 300 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளமும் சீரமைப்பு
x
தினத்தந்தி 10 Oct 2018 4:30 AM IST (Updated: 10 Oct 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ரெயில் நிலையத்தில் 4, 5-வது நடைமேடைகள் விரிவாக்கப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 300 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளமும் சீரமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் மிக பழமை வாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். இந்த ரெயில் நிலையத்தின் வழியாக ராமேஸ்வரம், மதுரை, நெல்லை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, சென்னை, கோவை, திருப்பதி, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

தஞ்சை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடைமேடைகள் உள்ளன. இவற்றின் முதல் 3 நடைமேடைகள் நீளமானவை. இவைகளை விட 4, 5-வது நடைமேடைகள் நீளம் குறைவாக இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இந்த 2 நடைமேடைகளின் தண்டவாளங்களுக்கு வந்தால் பின்னால் இருக்கும் பெட்டியில் இருப்பவர்கள் இறங்குவதற்கு நடைமேடை இருக்காது. தரையில் இறங்கி, சிரமப்பட்டுத்தான் நடைமேடைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

அதிக பெட்டிகளுடன் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் 1 முதல் 3-வது நடைமேடைகளின் தண்ட வாளங்கள் வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 4, 5-வது நடைமேடைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நடைமேடைகளை விரிவாக்கம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது.

அதன்படி 2 நடைமேடைகள் விரிவாக்கப்பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 70 மீட்டர் நீளத்திற்கும், 2½ மீட்டர் அகலத்திற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப 4-வது நடைமேடையின் தண்டவாளங்கள் 300 மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள், இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, நடைமேடைகள் விரிவாக்க பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. ரூ.40 லட்சம் செலவில் நடைமேடைகள் விரிவாக்கம், தண்டவாளங்கள் சீரமைப்பு என 2 பிரிவாக பணிகள் நடக்கிறது. இன்னும் சில தினங்களில் பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.

Next Story