வயல்களில் மழைநீர் தேக்கம்: சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை


வயல்களில் மழைநீர் தேக்கம்: சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொறையாறு,

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் காவிரிநீர், கடைமடை பகுதியான பொறையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான அளவு வந்து சேரவில்லை. இதனால் பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, திருக்களாச்சேரி, திருவிடைக்கழி, காழியப்பநல்லூர், இலுப்பூர், விசலூர், நல்லாடை, அரசூர், திருவிளையாட்டம், கீழ்மாத்தூர், மேல்மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் மூலம் சம்பா நெற்பயிர்களை நடவு செய்து இருந்தனர். இந்த சம்பா பயிர் நாற்றுகள் தற்போது முளைத்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தற்போது மழைவிட்டும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால் சம்பா இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறோம்.

இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டாலும், கடைமடை பகுதியான பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக்கு போதுமான அளவு பாசனநீர் வரவில்லை. இந்தநிலையில் தற்போது மழை பெய்து வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Next Story