களக்காடு அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது பரபரப்பு தகவல்


களக்காடு அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:00 AM IST (Updated: 10 Oct 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் நடுக்கல்லடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா மகன் பிரபாகரன் (வயது 25) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மர்மநபரால் பிரபாகரன் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக நேற்று அதே ஊரைச் சேர்ந்த சாது சுந்தர் சிங் மகன் வினோத் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிரபாகரன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

பிரபாகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணை, அதே ஊரை சேர்ந்த வினோத் (24) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க அந்த பெண்ணின் பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இதனை அறிந்த பிரபாகரன், வினோத் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வினோத், ஸ்குருடிரைவரால் பிரபாகரனின் நெஞ்சில் குத்தியதும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

Next Story