மாவட்ட செய்திகள்

திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த மேலும் ஒரு பெண் கைது + "||" + A woman was arrested for preparing a duplicate certificate in Tirupur

திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த மேலும் ஒரு பெண் கைது

திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த மேலும் ஒரு பெண் கைது
திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கில் மேலும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு தாலுக்கா அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிலர் போலியாக சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை பிடிக்க தாசில்தார் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் திட்டமிட்டனர்.

இதையடுத்து தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். அப்போது திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் பாரதிநகரில் செயல்பட்டு வரும் ஒரு அழகுநிலையத்தில் தேவையான போலி சான்றிதழ்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி வருவாய் துறையினர் ஏற்பாடு செய்திருந்த மணி என்பவர் அழகுநிலையத்தில் இருந்த மாசானவடிவு(வயது 37) என்ற பெண்ணை தொடர்பு கொண்டு கோர்ட்டில் ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதன்படி ஜாமீன் பெறுவதற்கான போலி முத்திரைகளுடன் கூடிய சான்றிதழை மாசானவடிவு தயாரித்துக்கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் மாசானவடிவை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் சப்–கலெக்டர் ஸ்ரவன்குமார் விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அழகுநிலையம் நடத்தி வந்த மகேஸ்வரி (38) என்ற பெண்ணையும் 15.வேலம்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும், அழகுநிலையத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு பேரூராட்சி செயல் அதிகாரி, நிலஅளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய துறைகளின் பெயரில் போலி முத்திரைகள் கொண்ட சீல் கட்டைகளும் இருந்தது.

ஜாமீன் பெறுவதற்கான மனு, பட்டா, வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளும் கட்டுக்கட்டாக இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இந்த போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்ததில் மேலும் ஒரு வக்கீல் மற்றும் இடைத்தரகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வக்கீல் தன்னிடம் ஜாமீன் பெற வருபவர்களை சான்றிதழுக்காக, மகேஸ்வரியிடம் பரிந்துரை செய்வார்.

இதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த அழகுநிலையத்தில் சென்று வக்கீலின் பெயரை கூறி தேவையான சான்றிதழ்களை பெற்று சென்றுள்ளனர். இதன்படி ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழ் ஒன்றிற்கு ரூ.8 ஆயிரம் வரை வசூல் செய்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 2 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களையும் உடனடியாக பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மகேஸ்வரியிடம் இருந்து இதுவரை போலி சான்றிதழ்களை பெற்று கொண்ட நபர்கள் குறித்தும், போலி சான்றிதழ்களை எந்தெந்த வி‌ஷயங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி போலி சான்றிதழ் தயாரிக்க தேவையான முத்திரைகள் அடங்கிய சீல் கட்டைகளை யார் இவர்களுக்கு தயாரித்து கொடுத்தது என்பது குறித்தும், பின்புலத்தில் அரசு அதிகாரிகள் யாரேனும் தொடர்பில் இருக்கின்றனரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணையை முதலில் திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் அழகுநிலையம் நடத்தி வந்த மகேஸ்வரி 15 வேலம்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால் இதுகுறித்து தற்போது 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். நீண்டநாட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வார்கள். அவர்களை தொடர்பு கொள்ளும் இடைத்தரகர்கள் வடமாநிலத்தவர்களுக்கு தேவையான போலி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளனர்.

இதன்படி போலி ஆதார் அட்டை அச்சடிக்க ரூ.6 ஆயிரமும், போலி சான்றிதழ்கள் பெற ரூ.8 ஆயிரம் என தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலி சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் தயாரித்து கொடுக்கும் பணியை பல வருடங்களாக இந்த கும்பல் நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இதுபோல இடைத்தரகர்கள் பலர் உள்ளனர். இதன்மூலம் மோசடி வேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் இதுவரை இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறான போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் இதற்காக தனி குழு ஒன்றை அமைத்து அனைத்து தாலுகா அலுவலகங்களையும் கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த மோசடியில் அரசு ஊழியர்களின் தொடர்பில் இருக்கின்றனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வில்லியனூர் அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. போலி ஆதார் கார்டு தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
போலி ஆதார் கார்டுகள் தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது
கிண்டியில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தை பிணம் கிடந்த வழக்கில், வாளி தண்ணீரில் அமுக்கி குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.