விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ‘ஆசிட்’ குடித்த சிறுமி
விருதுநகர் அருகே கர்ப்பிணி தாயுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற 4 வயது சிறுமி தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்ததால் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள சந்திரிகிரிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவரது மனைவி சுகந்தி. இவர்களது 4 வயது மகள் கிருஷ்மா. தற்போது கர்ப்பிணியாக உள்ள சுகந்தி மருத்துவ பரிசோதனைக்காக கன்னிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார். தன்னுடன் மகள் கிருஷ்மாவையும் அழைத்துச் சென்றார்.
அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த உடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அப்போது சிறுமி கிருஷ்மா அருகில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் இருப்பதாக நினைத்து குடித்தாள். ஆனால் குடித்த உடன் அவளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வாந்தி எடுத்தாள். அதன் பின்னர்தான் அவள் குடித்தது ஆசிட் என தெரிய வந்தது.
உடன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அவளுக்கு சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் குடித்ததால் சிறுமி கிருஷ்மாவுக்கு தொண்டையிலும், உணவுக்குழாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரேமாவிடம் கேட்டபோது, “ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிட் இருக்க வாய்ப்பு இல்லை. வெளியில் இருந்து சிறுமி கிருஷ்மா தண்ணீர் இருப்பதாக நினைத்து ஆசிட் பாட்டிலை எடுத்து வந்திருக்கலாம். அல்லது வேறு யாராவது ஆசிட் பாட்டிலை அங்கு வைத்திருந்திருக்கலாம்.” என்றார்.
இது பற்றி சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறுகையில், “ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிட் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. விசாரணையில் அந்த பாட்டிலில் இருந்தது பெயிண்ட்டுடன் கலக்கும் தின்னர் திரவம் என தெரிய வந்தது. அதை யார் அங்கு வைத்துச் சென்றார் என்று தெரிய வில்லை. எனினும் சிறுமி கிருஷ்மாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த தின்னர் பாட்டிலை வைத்துக் சென்றது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.” என்றார்.