வாடிக்கையாளர் அளித்த காசோலையை தொலைத்த வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


வாடிக்கையாளர் அளித்த காசோலையை தொலைத்த வங்கி  ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:14 PM GMT)

வாடிக்கையாளர் அளித்த காசோலையை தொலைத்த வங்கி நிர்வாகம் இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு ராஜபாளையம் அருகே முகவூரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக ரூ.4 லட்சத்துக்கு தனியார் வங்கியின் காசோலையை பவுன்ராஜ் கொடுத்தார்.

அதனை மாரிமுத்து, தான் கணக்கு வைத்துள்ள அரசு வங்கியில் கடந்த 20.8.2016 அன்று செலுத்தினார். ஆனால் அந்த காசோலை மீது எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து அந்த வங்கிக்கு மாரிமுத்து அடிக்கடி சென்று காசோலை குறித்து கேட்டுள்ளார். நாட்களை கடத்திக் கொண்டே சென்ற அந்த வங்கியின் மேலாளர் இறுதியில் 21.9.16 அன்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அதில் “காசோலை போக்குவரத்தின் போது எங்கோ தொலைந்து விட்டது. வங்கியில் கோடி, கோடியாய் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும். இது ஒரு பெரிய வி‌ஷயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் உள்ள அந்த வங்கியின் வட்ட அலுவலகத்துக்கும் புகார் தெரிவித்தார். அவர்களும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

இதையடுத்து மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி தேவதாஸ், உறுப்பினர் சிவன்மூர்த்தி ஆகியோர் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

காசோலையை தொலைத்தது வங்கியின் சேவைக் குறைபாட்டை தெரிவிக்கிறது. எனவே சேவை குறைபாட்டிற்காக மதுரை வட்ட அலுவலக மேலாளர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மேலாளர் ஆகியோர் கூட்டாகவோ, தனித்தனியாகவோ மாரிமுத்துவிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். காசோலையில் குறிப்பிட்ட பணம் தொலைந்து போகாததால் அது குறித்து பிரச்சினை எழவில்லை.

மேலும் மாரிமுத்துவிற்கு ஏற்பட்ட மன உளைச்சல், மன கஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரமும் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தொகையினை உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மனு தாக்கல் செய்த நாளில் இருந்து பணம் ஈடாகும் வரை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story