ஏ.டி.எம். ரகசிய எண்ணை வாங்கி: பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் - போலீஸ் கமிஷனரிடம் புகார்


ஏ.டி.எம். ரகசிய எண்ணை வாங்கி: பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் - போலீஸ் கமிஷனரிடம் புகார்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:30 PM GMT)

ஏ.டி.எம்.ரகசிய எண்ணை வாங்கி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம், 


சேலம் சுவர்ணபுரி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 50). தொழிலாளி. இவருடைய மனைவி லதா (43). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் லதாவின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஏ.டி.எம்.கார்டு காலாவதியாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், லதா பயன்படுத்தி வரும் ஏ.டி.எம்.கார்டு மூலம் பணம் எடுக்க முடியாது. இதனால் அதை புதுப்பிக்க வேண்டும். எனவே, ஏ.டி.எம்.நம்பர், ரகசிய எண் ஆகியவற்றை தெரிவிக்குமாறு கூறினார்.

அதற்கு லதா, நான் வேலைக்கு வந்துவிட்டேன். வீட்டில் தான் ஏ.டி.எம்.கார்டு உள்ளது. எனவே, மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அந்த விவரத்தை சொல்கிறேன் என்று அந்த நபரிடம் தெரிவித்தார். இதையடுத்து வீட்டிற்கு லதா வந்தவுடன் அந்த நபரிடம் இருந்து மீண்டும் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது, அதை எடுத்து பேசிய லதா, ஏ.டி.எம்.நம்பர், அதில் இருந்த தகவல்கள் அனைத்தையும் அந்த நபரிடம் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுபற்றிய விவரத்தை லதா தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் வங்கியில் இருந்து யாரும் பேசியிருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் மர்ம நபரிடம் ஏ.டி.எம்.நம்பரை ஏன் தெரிவித்தீர்கள் என்று அக்கம் பக்கத்தினர் லதாவிடம் தெரிவித்தனர். பிறகு தான் பணத்தை திருடுவதற்காக மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி நாடகம் ஆடியிருக்கலாம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வங்கிக்கு சென்று அவரது கணக்கை சரிபார்த்தபோது, மர்ம நபர் போன் செய்த 10 நிமிடத்திற்குள் ரூ.20 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் ஏ.டி.எம்.நம்பரை பயன்படுத்தி ரூ.20 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story